

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேட் ரென்ஷா சதம் விளாசி அசத்தியதுடன் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 124 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து திணறியது. அப்போது நங்கூரம் போல் நின்ற மேட் ரென்ஷா, நாதன் லியானுடன் சேர்ந்து 9-வது விக்கெட்டுக்கு 115 ரன் சேர்த்து அணியைச் சரிவிலிருந்து மீட்டார்.
இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேட் ரென்ஷா 190 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 390 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் மேட் ரென்ஷா படைத்த சாதனைகள்
கடந்த 12 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு முன் கடந்த 2014 மார்ச்சில் கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் 145 ரன்கள் அடித்ததே தென் ஆப்பிரிக்க மண்ணில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் அடித்த கடைசி சதமாக இருந்தது.
அதன்பின் 12 ஆண்டாக எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரும் அங்கு சதமடிக்க முடியாத நிலையில், அந்த நீண்ட கால ஏக்கத்தை மேட் ரென்ஷா தற்போது தீர்த்து வைத்துள்ளார்.
டர்பன் மைதானத்தில் சதமடித்த 10-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன் என்ற சாதனையையும் ரென்ஷா படைத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத் அடித்த 145 ரன்கள் சாதனையை ரென்ஷா முறியடித்தார்.