2வது போட்டி டிரா: இலங்கை உடனான டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது இந்தியா

இலங்கை அணி 2வது இன்னிங்சில் 429 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
team india
Published on

சோனல் தினுஷாவின் சிறப்பான சதத்தால் இந்தியா, இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 15-ம் தேதி நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியா, இலங்கை இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணி ரன் குவிப்பு

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்து 117 ரன்னில் வெளியேறினார். துருவ் ஜூரல் அபாரமாக ஆடி சதமடித்து 115 ரன்னில் வெளியேறினார்.

இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா, கேஷரா நுவாந்தா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

சோனல் தினுஷா சதம்

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சோனல் தினுஷா சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார். பசிந்து சூர்யபந்தாரா அரைசதம் கடந்து 80 ரன்னில் வெளியேறினார்.

இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் தலா 3 விக்கெட்டும், சரண்ஷ் ஜெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இலங்கை அணி பாலோ ஆன் பெற்றது.

தொடர்ந்து, ஆடிய இலங்கை அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

பசிந்து சூர்யபந்தாரா 92 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 52 ரன்னும் எடுத்தனர். 4-ம் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 16 ரன்கள் முன்னிலை பெற்றது.

சோதித்த சோனல் தினுஷா

இந்தியா எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இலங்கை வீரர் சோனல் தினுஷா தூணாக நின்றார். அவர் காலை முதலே பொறுப்புடன் ஆடி சதமடித்து இலங்கையை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

7-வது விக்கெட்டுக்கு இணைந்த சோனல் தினுஷா-கேஷரா நுவந்தா ஜோடி 112 ரன் சேர்த்தது. கேஷரா நுவந்தா 45 ரன்னில் அவுட்டானார். இதேபோல், 9வது விக்கெட்டுக்கு இணைந்த சோனல் தினுஷா-லஹிரு குமாரா ஜோடி நிதானமாக ஆடி 47 ரன் எடுத்தது.

இறுதியில், இலங்கை அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 429 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. சோனல் தினுஷா 133 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.

இந்திய அணி சார்பில் மானவ் சுதார், ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com