

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த மார்க் வுட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான இவர் 11 வருடங்களாக இங்கிலாந்து அணிக்காக விளையாடியவர்.
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மார்க் வுட். இவர் தொடர்ந்து மணிக்கு 95 மைல் வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்டவர். இரண்டு முறை உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் மார்க் வுட் இடம் பிடித்திருந்தார்.
இந்த நிலையில் 36 வயதான மார்க் வுட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அறிமுகம் ஆனார். இதுவரை 38 போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு ஆஷஸ் தொடரில் விளையாடியுள்ளார். 2015-ல் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து தொடரை கைப்பற்றியதற்கான விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
2023-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 0-2 என பின்தங்கியிருந்தது. அப்போது ஹெட்லிங்லீயில் நடைபெற்ற போட்டியில் ஒரு ஸ்பெல்லில் அபாரமாக பந்து வீசி இங்கிலாந்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இறுதியாக இங்கிலாந்து தொடரை சமன் செய்தது.
2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரை சொந்த மண்ணில் இங்கிலாந்து கைப்பற்றியது. இதில் 18 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை இங்கிலாந்து வென்றது இந்த தொடரிலும் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 70 ஒருநாள் போட்டிகளில் 80 விக்கெட்டுகளும், 38 டி20 போட்டிகளில் 54 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற நான் முடிவு செய்துள்ளேன். கடந்த ஓராண்டு காலச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது இது பெரிய ஆச்சரியமாக இருக்காது என்றாலும், எனது ஒப்பந்தம் முடிவடையும் இந்த வேளையில் இது ஒரு இயல்பான தருணமாகவே எனக்குத் தோன்றுகிறது என்று மார்க் வுட் தெரிவித்துள்ளார்.