

திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில் கோவை கிங்ஸ் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது கட்டம் சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.
இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பவுலிங் தேர்வு செய்தது. மழையால் போட்டி 16 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 16 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷாருக் கான் 18 பந்தில் 59 ரன்கள் குவித்தார். சுரேஷ் லோகேஷ்வர் 31 ரன்னும், பாலசுப்பிரமணியன் 30 ரன்னும் எடுத்தனர்.
டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 16 ஓவரில் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. அதிகபட்சமாக சக்தி கருப்பசாமி 19 ரன் எடுத்தார்.
இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 13.2 ஓவரில் 93 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை கிங்ஸ் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 4 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
கோவை கிங்ஸ் அணி சார்பில் ஜாதாவேத் சுப்ரமணியன் 4 விக்கெட்டும், மணிமாறன் சித்தார்த் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
திண்டுக்கல் அணி தான் ஆடிய 7 போட்டிகளில் 5-வது தோல்வி அடைந்துள்ளது.