2-வது ஒருநாள் போட்டியில் 3 வீரர்கள் சதம்: இந்தியாவுக்கு 406 இமாலய இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

இந்திய அணியில் அறிமுகம் ஆன அக்யூப் நபி 8.5 ஓவரில் 84 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
ஷாய் ஹோப்- அமிர் ஜாங்கூ
ஷாய் ஹோப்- அமிர் ஜாங்கூ
Published on: 

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. விராட் கோலி, சுப்மன் கில் சதம் விளாசினர்.

இந்த நிலையில் 2-வது போட்டி கவுகாத்தியில் இன்று மதியம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தொடங்கியது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான் கேம்ப்பெல், கார்ட்டி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கார்ட்டி 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷாய் ஹோப் களம் இறங்கினார்.

ஜான் கேம்ப்பெல் 29 பந்துகளில் அரைசதம், 65 பந்துகளில் சதம்

ஜான் கேம்ப்பெல் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 2 சிக்ஸ், 7 பவுண்டரிகளுடன் அரைசதம் விளாசினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் குவித்தது.

அரைசதத்தை தொடர்ந்து கேம்ப்பெல் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். அவர் 65 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் சதம் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் வீரரின் 5-வது அதிவேக சதம் இதுவாகும்.

தொடர்ந்து விளையாடிய அவர் 68 பந்தில் 101 ரன்கள் எடுத்த நிலையில் குர்னூர் பிரார் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் 18.1 ஓவரில் 147 ரன்கள் குவித்தது.

ஷாய் ஹோப், அமிர் ஜாங்கூ சதம்

3-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் அமிர் ஜாங்கூ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இருவரும் சதம் விளாசினர். ஷாய் ஹோப் 94 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 104 ரன்கள் விளாசினார். அமிர் ஜாங்கூ 77 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் 114 ரன்கள் விளாசினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது.

மூன்று பேர் சதம் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 5 ஓவர்களில் 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

96 ரன்கள் விட்டுக்கொடுத்த குர்னூர் பிரார்

அக்யூப் நபி 8.5 ஓவரில் 84 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் ஏமாற்றம் அடைந்தார். குர்னூர் பிரார் 10 ஓவரில் 96 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஜடேஜா 75 ரன்களும், குல்தீப் யாதவ் 65 ரன்களும் விட்டுக்கொடுத்து தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் 406 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com