அடித்து ஆடிய கான்வே: பாய்ந்து கேட்ச் பிடித்து அசத்திய ஜெய்ஸ்வால்

நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.
jaiswal
Published on: 
Summary

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று, இந்தியாவின் ஜெய்ஸ்வால் ஒற்றைக் கையில் பறந்து கேட்ச் பிடித்து அசத்தியதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டாம் பிளெண்டல், டாம் லாதம் அரை சதம் கடந்தனர்.

இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டும், குர்னூர் பிரார், அன்ஷுல் கம்போஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. துருவ் ஜுரல் 88 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்தின் இரண்டாவது இன்னிங்சில் 33-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசியபோது சுழற்பந்து வீச்சாளரான சுந்தரின் பந்தை கட் ஷாட் அடிக்க முயன்ற கான்வே, பந்தின் திசையைச் சரியாகக் கணிக்கத் தவறினார்.

ஷார்ட் தேர்ட் திசையில் சென்ற அப்பந்து வேகமாக எல்லைக்கோட்டை நோக்கிச் சென்றபோது, மின்னல் வேகத்தில் தாவிய ஜெய்ஸ்வால் இடது கையால் பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த சிறப்பான விக்கெட் வீழ்ச்சி இந்திய அணிக்குத் தேவையான திருப்புமுனையை வழங்கியது.

ஜெய்ஸ்வாலின் இந்த உலகத்தரம் வாய்ந்த கேட்சை இந்திய ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

X