

அ.தி.மு.க. சார்பில் அய்யப்பன் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் களம் காண்கிறார். அ.ம.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஐந்துகோவிலானும் போட்டியில் உள்ளனர்.
அதிமுக வேட்பாளர் அய்யப்பன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 20,000
2. அசையும் சொத்து- ரூ.4,28,200
3. அசையா சொத்து- ரூ. ஏதுமில்லை
அகில இந்திய பார்வர்டு பிளாக் வேட்பாளர் கதிரவன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 48,000
2. அசையும் சொத்து- ரூ. 26,73,148,26
3. அசையா சொத்து-
உசிலம்பட்டி தொகுதி பார்வர்டு பிளாக் கட்சிக்கான தொகுதியாக கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. இங்கு பார்வர்டு பிளாக் அதிகமுறை வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக அ.தி.மு.க. வென்றுள்ளது.
மதுரையை தலைநகராக கொண்டு பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் இருந்தபோது உசிலம்பட்டி பகுதி தொன்மையான பகுதியாக விளங்கி உள்ளது. இங்கு சமணர்கள் படுகை உள்ளது. உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை, உலைப்பட்டி பகுதிகளில் பண்டைய மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன.
உசிலம்பட்டி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,83,588. ஆண் வாக்காளர்கள் 1,41,955. பெண் வாக்காளர்கள் 1,41,623. மூன்றாம் பாலினத்தவர் 10.
உசிலம்பட்டி தொகுதியை பொருத்தவரை 1957-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. ஆனால் இங்கு அதிகமுறை வெற்றி வாகை சூடியது பார்வர்டு பிளாக்தான்.
அந்த கட்சி சார்பில் மூக்கையாதேவர் 4 முறையும், சுயேட்சையாக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளார்.
அதன் பிறகு ஆண்டித்தேவர், பி.கே.எம். முத்துராமலிங்கம், பி.என்.வல்லரசு, எல்.சந்தானம், பி.வி.கதிரவன் என பார்வர்டு பிளாக் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்திய தொகுதி உசிலம்பட்டி. இவர்களுக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது.
இந்த தொகுதியில் செல்லம்பட்டி, சேடபட்டி, உசிலம்பட்டி நகராட்சிகளும், எழுமலை உள்ளிட்ட பல பேரூராட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
பெண் சிசு கொலை இங்கு அடிக்கடி நடப்பதாக புகார்கள் உள்ளன. இந்த தொகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மகளிர் கல்லூரி என ஒன்றுகூட இதுவரை தொடங்கப்படவில்லை.
உசிலம்பட்டி பகுதியில் பிரதான தொழில் விவசாயம்தான்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த தொகுதியில் பிஸ்கட், மிட்டாய் தயாரிப்பு தொழிற்சாலைகள் அதிக அளவில் இருந்தன. ஆனால் விலைவாசி உயர்வு, பன்னாட்டு கம்பெனிகளில் தாக்கம் போன்றவற்றால் இந்த தொழில்கள் நலிவடைந்து தற்போது ஒருசில கம்பெனிகளே உள்ளன. இதனால் வேலைவாய்ப்புக்காக தொகுதி இளைஞர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு சென்று விட்டன.
விருதுநகர் மாவட்டம், தேனி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், மதுரை மாவட்டத்தை இணைக்கும் பகுதியாக உசிலம்பட்டி தொகுதி உள்ளது. இந்த 4 மாவட்டங்களுக்கும் செல்ல உசிலம்பட்டி பஸ் நிலையத்தைத்தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் பஸ் நிலையத்தில் போதுமான கழிவறை வசதி இல்லை. குடிநீர் வசதியும் இங்கு கேள்விக்குறிதான்.
மேலும் விருதுநகர்-மதுரை-தேனி மாவட்டத்தை இணைக்கும் சாலையான மல்லப்புரம்- மயிலாடும்பாறை சாலை பணிகள் நிறைவு பெற்றுவிட்டபோதிலும் வாகன போக்குவரத்துக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை மாறும்.
உசிலம்பட்டி விவசாயிகளின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய் திட்டம் நிறைவுக்கு வந்து விட்டாலும் வினாடிக்கு 316 கன அடி நீர் திறந்து விடலாம் என்ற நிலையில் கால்வாயின் பாதுகாப்பு கருதி 150 கனஅடி நீர் மட்டுமே திறக்கின்றனர். இதனை மாற்ற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.
மதுரை என்றால் மல்லிகை. இந்த மல்லிகை உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி பகுதிகளில்தான் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட காலங்களில் பூக்கள் அதிகம் உற்பத்தியாகி விலை வீழ்ச்சி ஏற்பட்டு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.
தேர்தல் வெற்றி
1957 மூக்கையாதேவர் (சுயேட்சை)
1962 மூக்கையாதேவர் (பா.பிளாக்)
1967 மூக்கையாதேவர் (பா.பிளாக்)
1971 மூக்கையாதேவர் (பா.பிளாக்)
1977 மூக்கையாதேவர் (பா.பிளாக்)
1980 -ஆண்டித்தேவர் (பா.பிளாக்)
1984 முத்துராமலிங்கம் (சுயேட்சை)
1989 வல்லரசு (தி.மு.க.)
1991 பாண்டியம்மாள் (அ.தி.மு-.க.)
1996 வல்லரசு (பா.பிளாக்)
2001 சந்தானம் (பா.பிளாக்)
2006 மகேந்திரன் (அ.தி.மு.க.)
2011 கதிரவன் (பா.பிளாக்)
2016 நீதிபதி (அ.தி.மு.க.)
2016 தேர்தல்
நீதிபதி (அ.தி.மு.க. வெற்றி)- 1,06,349
இளமகிழன் (தி.மு.க.)- 73443
பாஸ்கரசேதுபதி (ம.தி.மு.க.)- 7079
கதிரவன் (பா.பிளாக்)- 5136
சங்கிலி (பா.ஜனதா)- 2860
ஐந்துகோவிலான்(நாம் தமிழர்)- 1437
மகேந்திரன் (பகுஜன் சமாஜ்)- 939
முருகன் (பா.ம.க.)- 619