மணப்பாறை தொகுதி கண்ணோட்டம்

தொடர்ச்சியாக மூன்று முறை அதிமுக வெற்றி பெற்றுள்ள மணப்பாறை தொகுதி குறித்து ஓர் அலசல்
மணப்பாறை தொகுதி
மணப்பாறை தொகுதி
Published on

மணப்பாறை

‘மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி, வயக்காட்டை உழுது போடு சின்னக்கண்ணு...’ என்ற கவிஞர் மருதகாசியின் பழம்பெரும் திரைப்பட பாடல், மணப்பாறை மாடுகளின் பெருமையை உலகிற்கு பறை சாற்றும். அவற்றை இன்றும் தக்க வைக்கும் வகையில், ஒரே நாளில் பலகோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் மாட்டுச் சந்தைக்கு புகழ்பெற்றது மணப்பாறை.

நொறுக்கு தீனியில் முதன்மை பெற்ற முறுக்கிற்கு, உலக பிரசித்தி பெற்ற ஊர் மணப்பாறை.

திருச்சி மாவட்டத்தில் இருக்கின்ற ஒரே ஒரு அணை, மணப்பாறை தொகுதியின் கடைகோடியில் அமைந்திருக்கின்ற பொன்னணியாறு அணை. ஆனால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி கரூர் மாவட்டத்திலும், பாசன வசதி முழுமையான திருச்சி மாவட்டத்திலும் உள்ளது. இதேபோல் தரைமட்டத்தில் இருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டு சிறப்பிற்குரிய தொங்குபாலம் அமைந்துள்ளதும் மணப்பாறை தொகுதியில்தான்.

மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, ஆகிய 3 ஒன்றியங்களை உள்ளடக்கியதுதான் மணப்பாறை சட்டமன்ற தொகுதி. மணப்பாறை ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள் இருந்தாலும் கூட அதில் 7 ஊராட்சிகள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. இதேபோல் வையம்பட்டி ஒன்றியத்தில் 18 ஊராட்சிகளும், மருங்காபுரி ஒன்றியத்தில் 49 ஊராட்சிகளும் உள்ளது. இதுமட்டுமின்றி 27 வார்டுகளை கொண்ட மணப்பாறை நகராட்சி, துவரகுறிச்சியை உள்ளடக்கிய பொன்னம்பட்டி பேரூராட்சி ஆகியவை உள்ளன. இதில் மணப்பாறை, மருங்காபுரி ஆகியவை தனித்தனி தாலுகா பகுதிகள்.

மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,88,990 வாக்காளர்கள் உள்ளனர்.

விவசாயம் தவிர, முறுக்கு தொழிலையும் நம்பி சுமார், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதேபோல் மாட்டுச்சந்தைக்கு பெயர்போன ஊர் என்பதால், கால்நடைகள் வளர்ப்பின் மூலமும் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை வளர்த்து வருகின்றனர்.

விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் மக்கள் நிறைந்த தொகுதியில், மழை பொய்த்து விட்ட காரணத்தால், விவசாயத்தைவிட்டு வேறு பணிகளுக்கு மக்கள் படையெடுக்கும் நிலையும் சமீபகால பரிதாபமாக உள்ளது.

மக்கள் கோரிக்கைகள்

மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ள பொன்னணியாறு அணைக்கு மாயனூரில் இருந்து காவிரி நீரை கொண்டு வந்து நிரப்பும் திட்டத்திற்கான திட்ட வரையறை தயார் செய்ய 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பின்தங்கிய பகுதியாக உள்ள மணப்பாறை தொகுதியில் கல்விப்படிப்பை முடித்து உயர்கல்விக்கு செல்ல விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கனவு என்பது மிகவும் சிரமமான ஒன்றுதான். ஏனென்றால் மணப்பாறை பகுதியில் அரசு கலை அறிவியல் உள்ளிட்ட எந்த அரசு கல்லூரிகளும் கிடையாது. மாணவ, மாணவிகள் மற்றும் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளதே தவிர இதுவரை கல்லூரி அமைக்கப்படவில்லை.

ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் வாக்குறுதியில் முதலிடம் பிடிப்பதும் அரசு கலை அறிவியல் கல்லூரி என்ற வாக்குறுதிதான். ஆனால் அவை அப்படியே வாக்குறுதியாகவே உள்ளது.

அதிமுக வேட்பாளர்

இதுமட்டுமின்றி அதிக அளவில் காய்கனி விளைச்சல் மற்றும் மலர்கள் சாகுபடி செய்யும் பகுதி என்பதால் காய்கனி குளிர்பதன கிடங்கு அமைத்து தர வேண்டும், வாசனை திரவிய தொழிற்சாலை அமைத்து தர வேண்டும் என்று வைக்கப்பட்டுள்ள கோரிக்கையும் இன்னும் அப்படியேதான் உள்ளது. புகழ்பெற்றது மணப்பாறை முறுக்கு என்றாலும் மணப்பாறை முறுக்கிற்கு புவிசார் குறியீடு கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்பதெல்லாம் சொல்லாகவே கிடக்கிறது.

மணப்பாறை மாட்டுச்சந்தையை மேம்படுத்திட வேண்டும், மருங்காபுரி ஒன்றியத்தை 2 அல்லது 3 ஆக பிரிக்க வேண்டும், தொங்கு பாலத்தை சுற்றுலா தளமாக்க உரிய முயற்சிகள் மேற்கொண்டு மேம்படுத்திட வேண்டும், மணப்பாறை நகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும், அரசு நர்சிங் கல்லூரி அமைத்திட வேண்டும், தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் என மக்களின் கோரிக்கை ஒவ்வொரு தேர்தல்களிலும் நீண்டு கொண்டே செல்கிறது.

அதிமுக சார்பில் ஏற்கனவே எம்எல்ஏ-வாக உள்ள இரா.சந்திரசேகர் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

1952 அந்தோணி பீட்டர் (காங்கிரஸ்)

1957 சின்னையாகவுண்டர் (காங்கிரஸ்)

1962 சின்னையா கவுண்டர் (காங்கிரஸ்)

1967 கே.கே.முத்தையா (காங்கிரஸ்)

1971 - கருணகிரி முத்தையா (காங்கிரஸ்)

1977 கருணகிரி முத்தையா (காங்கிரஸ்)

1980 ராஜ்குமார் (அ.தி.மு.க.)

1984 சோலைராஜ் (அ.தி.மு.க.) 

1989 பொன்னுசாமி (அ.தி.மு.க.)

1991 பொன்னுசாமி (அ.தி.மு.க.)

1996 செங்குட்டுவன் (தி.மு.க.)

2001 - செல்லையா (அ.தி.மு.க.)

2006 - சின்னச்சாமி (அ.தி.மு.க.)

2011 - ஆர்.சந்திரசேகர் (அ.தி.மு.க.)

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com