ஐபிஎல் 2018- கோலியின் அரைசதத்தால் கேகேஆர்-க்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆர்சிபி

விராட் கோலியின் அரைசதத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். #IPL2018 #RCBvKKR
ஐபிஎல் 2018- கோலியின் அரைசதத்தால் கேகேஆர்-க்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆர்சிபி
Published on

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் குயின்டான் டி காக், பிராண்டன் மெக்கல்லம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பெங்களூர் சின்னசாமி ஆடுகளம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமான இருக்கும்.

ஆனால் இன்று பந்து அதிக அளவில் டர்ன் ஆனது. இதனால் பந்து அடிக்கடி பவுண்டரிக்கு பறக்கவில்லை. இருவரும் அதிரடியாக விளையாட முயன்றனர். இருந்தாலும் ஸ்கோர் போர்டில் ரன் வந்த பாடில்லை. பவர் பிளே ஆன முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் மட்டுமே எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். 9-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டி காக் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 29 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய மெக்கல்லம் 28 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மனன் வோரா ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் மந்தீப் சிங் ஜோடி சேர்ந்தார். சரியாக 14 ஓவரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 100 ரன்னைத் தொட்டது.

16-வது ஓவரை ஷிவம் மவி வீசினார். இந்த ஓவரில் கோலி இரண்டு பவுண்டரி விரட்டினார். 17-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். இந்த ஓவரில் மந்தீப் சிங் இரண்டு இமாலய சிக்ஸ் அடித்தார். 18-வது ஓவரை ரஸல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கோலி சிக்ஸ் அடித்தார். ஆனால் 3-வது பந்தில் மந்தீப் சிங் ஆட்டமிழந்தார். என்றாலும், ஐந்தாவது பந்தில் இரண்டு ரன் அடித்து அரைசதம் அடித்த கோலி, கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் 18 ஓவர் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஸ்கோர் 150 ரன்னைத் தொட்டது.

19-வது ஓவரை ஷிவம் மவி வீசினார். இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரை மிட்செல் ஜான்சன் வீசினார். இந்த ஓவரில் கிராண்ட்ஹோம் ஒரு சிக்ஸ் விளாசினார். கடைசி பந்தில் கோலி ஒரு சிக்ஸ் விளாச 16 ரன்கள் கிடைத்தது. இதனால் பெங்களூர் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது. விராட் கோலி 44 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com