

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலாவது மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது மற்றும் நான்காவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.
இந்த நிலையில் இந்த இரு அணிகளில் தொடரை கைப்பற்றப் போகும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று (அக். 17) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
இந்த டி20 தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் ரன்வேட்டைக்கு குறைவில்லாத அளவுக்கு இரு அணிகளும் போட்டிப் போட்டு ரன் குவிப்பில் அசத்தின. தொடரில் இதுவரை 6 முறை 200 ரன்களுக்கும் மேல் குவிக்கப்பட்டன. குறிப்பாக, ராஞ்சியில் நடந்த இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 250 ரன் இலக்கை எளிதாக எட்டி சாதனை படைத்தது.
தொடரில் இதுவரை மூன்று சதங்கள், ஆறு அரைசதங்கள் பதிவாகியுள்ளன. மேலும், 98 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐ.சி.சி.யின் முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற இரு நாட்டு டி20 கிரிக்கெட் தொடர் ஒன்றில் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட தொடராக இது அமைந்துள்ளது. இதே போல் இன்றைய பெங்களூரு போட்டியிலும் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங் சிறப்பாக இருக்கிறது. எனினும், பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங் எதிர்பார்த்த அளவுக்கு திருப்திகரகமாக அமையவில்லை. பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீச முடியாமல் தடுமாறுவது பாதிப்பை ஏற்படுத்துகிறது. முந்தைய ஆட்டத்தில் பந்து தாக்கி தோள்பட்டையில் காயமடைந்து பாதியில் வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை.
இதையடுத்து அணிக்கு மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அழைக்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர்குமார், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்காக ஆடுவதால் இந்த மைதானத்தின் தன்மையை நன்கு அறிந்தவர். சர்வதேச கிரிக்கெட்டில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரும்புவதால் அவரது பந்துவீச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.