இந்தியா - ஜப்பான் டி20 போட்டி டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன

வருகிற 22-ஆம் தேதி இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் ஒற்றை டி20 போட்டியில் மோதுகின்றன.
Japan vs India
Published on

செப்டம்பர் 22-ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்தியா-ஜப்பான் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஜப்பான் கிரிக்கெட் சங்கம் (ஜே.சி.ஏ.) அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் அதிகாரப்பூர்வ சர்வதேச கிரிக்கெட் போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஒரே ஒரு டி20 போட்டி, இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுசுகி கோப்பையின் கீழ் நடைபெறும் இந்தப் போட்டி, இந்தியா-ஜப்பான் தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக அமைகிறது.

சமூக வலைத்தள பதிவு:

போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஜே.சி.ஏ. சமூக வலைதளங்களில் அறிவித்ததோடு, இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டிக்கு ஆதரவளித்த ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தது.

இந்திய மற்றும் ஜப்பான் ஆண்கள் அணிகளுக்கு இடையேயான முதல் அதிகாரப்பூர்வ சர்வதேச கிரிக்கெட் போட்டியாக இந்த மோதல் அமையும். ஜே.சி.ஏ. மற்றும் பி.சி.சி.ஐ. இந்த மாத தொடக்கத்தில் இந்த போட்டியை கூட்டாக அறிவித்தன.

இந்தப் போட்டி, விளையாட்டின் மூலம் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே மக்கள் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'ஸ்போர்ட் 75' என்ற முன்னெடுப்பையும் தொடங்கி வைக்கும். ஜப்பானியப் பிரதமர் சானே டகாயிச்சிக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற உச்சிமாநாட்டின்போது எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முன்னெடுப்பு உருவாகியுள்ளது.

விளையாட்டை அறிமுகப்படுத்த வாய்ப்பு:

"ஜப்பானில் நடைபெறும் ஒரு சிறப்பு டி20 சர்வதேச போட்டிக்காக இந்திய மற்றும் ஜப்பானிய ஆண்கள் அணிகள் ஒன்றிணையும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் பி.சி.சி.ஐ. மகிழ்ச்சி கொள்கிறது. இது கிரிக்கெட்டிற்கு ஒரு முக்கியமான தருணம், ஏனெனில் இது இந்திய அணியை ஒரு புதிய தளத்திற்கு அழைத்துச் செல்வதோடு, ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள பார்வையாளர்களுக்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது," என்று பி.சி.சி.ஐ. செயலாளர் தேவாஜித் சைகியா கூறினார்.

2036 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் லட்சியத்தையும் கருத்தில் கொண்டு, விளையாட்டின் மூலம் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான மக்கள் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com