

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டி மோசமான வானிலை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று (நவ. 13) நடைபெறுகிறது. மவுன்ட் மவுங்கானுவில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
நடப்பு ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் களமிறங்கிய நிலையில், எஞ்சியுள்ள கடைசி 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக வழிநடத்த இருக்கிறார். ஒருநாள் தொடரைத் தொடர்ந்து தொடங்க இருக்கும் டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இஷான் கிஷனுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் இடத்தில் அவர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது.
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான அணி நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. இந்த போட்டியாவது மழையால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. இந்தப் போட்டியில் தோல்வியை தழுவும் நிலையில், அந்த அணி ஒருநாள் தொடரை இழக்கக்கூடும்.
முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை நியூசிலாந்து அணி ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற அந்த அணி கடுமையாக போராடும். நான்காவது ஒருநாள் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் பிரெட் ரேன்டெல் சேர்க்கப்பட்டு உள்ளார்.