

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என கைப்பற்றிய நிலையில், ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் வென்ற இங்கிலாந்து 2-0 என டி20 தொடரை கைப்பற்றியது.
இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 18.5 ஓவரில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அதிரடியாக ஆடினார். அவர் 24 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. கமிந்து மெண்டிஸ் ஓரளவு தாக்குப் பிடித்து 35 ரன்கள் சேர்த்தார்.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர், வில் ஜாக்ஸ், சோனி பேக்கர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 9.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது. ஜோஸ் பட்லர் 32 பந்தில் 62 ரன் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
2வது விக்கெட்டுக்கு ஜோஸ் பட்லர்-ஹாரி புரூக் ஜோடி 38 பந்தில் 85 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நாயகன் விருது சோனி பாகெருக்கும், தொடர் நாயகன் விருது ஹாரி புரூக்குக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி, ஐசிசி டி20 தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியது.