

இரண்டு ஒற்றையர், ஒரு இரட்டையர் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி ஜப்பான் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. பேட்மிண்டன் ஆண்கள் அணி பிரிவில் இன்று காலிறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா- ஜப்பான் அணிகள் மோதின.
ஒரு அணியில் மூன்று வீரர்கள் இடம் பிடித்திருப்பார்கள். ஒவ்வொரு வீரரும் மற்ற வீரருடன் தலா ஒரு முறை தனியாக மோத வேண்டும். பின்னர் இரட்டையராக சேர்ந்து இரண்டு போட்டிகளில் மோத வேண்டும். மொத்தம் 5 போட்டிகளில் 3-ல் வெற்றிகளை பெறும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். முதல் 3 வெற்றிகளை பெற்றால் அதன்பின் போட்டி நடைபெறாது.
அந்த வகையில் முதல் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கொடாய் நரவ்காவை எதிர்கொண்டார். இதில் லக்ஷ்யா சென் 2-1 (11-21, 21-5, 21-19) என வெற்றி பெற்றார்.
2-வது போட்டியில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, யுகோ கோபயாஷி- தகுரோ ஹோகி ஜோடியை எதிர்கொண்டது. இதில் 21-18, 24-22 என இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
3-வது போட்டியில் ஆயுஷ் ஷெட்டி- ஜப்பானின் கோகி வட்டாநபேவை எதிர்கொண்டா்ர. இதில் ஆயுஷ் ஷெட்டி 21-10, 21-19 என வெற்றி பெற்றார். இதனால் இந்தியா 3-0 என ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அரையிறுதிக்கு முன்னேறியதால் இந்திய அணி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. பேட்மிண்டன் அணி பிரிவில் அரையிறுதியில் தோல்வியடையும் இரு அணிகளுக்கும் வெண்கல பதக்கம் வழங்கப்படும். இந்திய அணி அரையிறுதியில் தென்கொரியா அல்லது சீனாவை சந்திக்க உள்ளது.
அதேவேளையில் பெண்கள் அணி 1-3 எனத் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.