

மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடரின் 'குரூப் ஏ' (Group A) பிரிவு ஆட்டத்தில், இந்தியா 94 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசியது.
இதைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாளி வெர்மா தொடக்கம் கொடுத்தனர்.
ஸ்மிருதி மந்தனா 19 ரன்கள் எடுத்த போது ரன் அவுட் ஆகி வெளியேறினார். பிறகு களமிறங்கிய பிரதிகா ராவல் 18 பந்துகளில் 22 ரன்களை எடுத்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்தடுத்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷஃபாளி வெர்மா மட்டும் சிறப்பாக ஆடி 36 பந்துகளில் 64 ரன்கள் (8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசினார்.
இதனால் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது. தாய்லாந்து மகளிர் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சுலிபார்ன் லவோமி 3 விக்கெட்டுகளையும், சுனிடா சதுரோங்கட்டனா 2 விக்கெட்டுகளையும், திபாச்சா புத்தவொங் மற்றும் சனிதா சுத்திரௌங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
160 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தாய்லாந்து மகளிர் அணி தொடக்கம் முதலே ரன் குவிக்க திணறியது. அந்த அணிக்கு துவக்கம் கொடுத்த நத்தகன் சந்தம் 4 ரன்களும், பணிதா மாயா 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய நானாபத் கொன்ச்சரோன்கய் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர்.
எனினும், மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தாய்லாந்து மகளிர் அணி 16.1 ஓவர்கள் முடிவில் 65 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய மகளிர் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீப்தி ஷர்மா மற்றும் நந்தனி ஷர்மா தலா 3 விக்கெட்டுகளையும், ஸ்ரீ சராணி 2 விக்கெட்டுகளையும், க்ராந்தி கௌத் 1 விக்கெட் வீழ்த்தினர். இதனால் இந்திய மகளிர் அணி 94 ரன்கள் வித்தயாசத்தில் அபார வெற்றி பெற்றது.