

நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, மோசமான சாதனைப் பட்டியலில் இணைந்தது.
இந்திய அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 333 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 89 ரன்னில் சுருண்டு பரிதாபமாக தோல்வி அடைந்தது. இதன்மூலம் 244 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்தின் மேட் ஹென்ரி முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா, விராட் கோலி, கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை டக் அவுட்டாக்கி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இந்திய அணியின் 6 முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றிய மேட் ஹென்ரி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஆட்டத்தின் முதல் ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் 3 விக்கெட் இழந்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஓவரில் ரன் எடுக்காமல் 3 விக்கெட் இழந்த இரண்டாவது அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்தது.
இதற்குமுன், கடந்த 1997-ல் லாகூரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷான் பொல்லாக் ஆட்டத்தின் முதல் ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.