

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. தேவ்தத் படிக்கல் முதல் சதத்தை பதிவு செய்தார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 47 ஆக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 32 ரன்னில் ரன் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுலுடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினர். தேநீர் இடைவேளையில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது காயம் காரணமாக கே.எல்.ராகுல் ரிடையர் ஹர்ட் முறையில் ஆடவில்லை. கே.எல்.ராகுல்-படிக்கல் ஜோடி 150 ரன்கள் சேர்த்தது.
சிறப்பாக ஆடிய படிக்கல் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு படிக்கல் உடன் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினார். இந்த ஜோடி 39 ரன் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 73 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. படிக்கல் 131 ரன்னும், ரிஷப் பண்ட் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.