கொழும்பு டெஸ்ட் மழையால் பாதிப்பு: இந்தியா 475/8- 95 ரன்களுடன் களத்தில் இருக்கும் துருவ் ஜூரல்

கொழும்பு டெஸ்டில் தேவ்தத் படிக்கல் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
துருவ் ஜூரல்
துருவ் ஜூரல்
Published on
Summary

காலே டெஸ்ட் போட்டியில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், கொழும்பு டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்ற இந்தியா முனைப்பு காட்டி வருகிறது.

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் கொழும்பில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து முதலில் பேட்டிங் செய்தது. ஜெய்ஸ்வால் (45), தேவ்தத் படிக்கல் (117), சுப்மன் கில் (50), ரிஷப் பண்ட் (63), ஜடேஜா (43) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜூரல் 7 ரன்களுடனும் ஜெய்ன் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

துருவ் ஜூரல் அபாரம்

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சரன்ஷ் ஜெய்ன் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மானவ் சுதர் நிதானமாக விளையாடினார். இதற்கிடையே மறுமுனையில் துருவ் ஜூரல் நிலைத்து நின்று விளையாடினார். அவர் 97 பந்தில் அரைசதம் அடித்தார்.

மானவ் சுதர் 51 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து 9-வது விக்கெட்டுக்கு துருவ் ஜூரல் உடன் முகமது சிராஜ் ஜோடி சேர்ந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 131.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. துருவ் ஜூரல் 155 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கால் களத்தில் உள்ளார்.

அசிதா பெர்னாண்டோ 25.2 ஓவரில் 78 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார். கேஷரா நுவந்தா 2 விக்கெட் வீழ்த்தினார்.

காலே டெஸ்டில் இந்தியா வெற்றி

காலே டெஸ்டில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தேவ்தத் படிக்கல் (167) சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 462 ரன்கள் குவித்தது. இலங்கை முதல் இன்னிங்சில் 284 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இந்தியா 2-வது இன்னிங்சில் 193 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ரிஷப் பண்ட் 66 ரன்கள் அடித்தார். பின்னர் 372 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை 206 ரன்களில் சுருண்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com