

பாலி நகரில் நடைபெற்ற ஐசிசி இயக்குநர்கள் கூட்டத்தில் ஜெய்ஷா இரண்டாவது முறையாக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக 2024, டிசம்பர் 1-ம் தேதி நியமிக்கப்பட்டார்.
இவரது புதிய பதவிக்காலத்தில் 2027-ல் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் உலகக் கோப்பை, 2028-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்ப்பு உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளன.
இந்நிலையில், ஐசிசி இயக்குநர்கள் கூட்டம் பாலி நகரில் இன்று நடைபெற்றது. இதில் ஜெய்ஷா இரண்டாவது முறையாக 2 ஆண்டு கால பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இதுகுறித்து ஜெய்ஷா கூறுகையில், ஐசிசி என்மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து எனக்கு நம்பிக்கை அளித்து ஆதரவளித்து வரும் ஒவ்வொரு இயக்குநருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐசிசி தலைவராகப் பணியாற்றுவது ஒரு பெரும் பாக்கியம். அதே சமயம் ஒரு பொறுப்பான பணியும் ஆகும். உலகெங்கிலும் கிரிக்கெட்டின் நலன்களை மேம்படுத்த, எங்கள் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற உறுதியுடன் செயல்படுவேன் என தெரிவித்துள்ளார்.
ஜெய்ஷா பிசிசிஐ செயலாளராகவும், ஆசிய கிரிக்கெட் பேரவை தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.