

இந்திய அணியின் கேப்டனாக 150 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார் ஹர்மன்பிரீத் கவுர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 56 ரன்னில் சுருண்டது. அடுத்து ஆடிய இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியை 150-வது போட்டியில் கேப்டனாக வழிநடத்திய ஹர்மன்பிரீத் கவுர் அணிக்கு சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது:
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டமாக இருந்தது.
நேற்றைய போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது.
ஒரு அணியாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். பந்துவீச்சாளர்கள் அவர்களது திட்டங்களை மிகவும் சரியாக செயல்படுத்தினார்கள். அணியில் உள்ள அனைவரும் நன்றாக செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அடுத்து விளையாடவுள்ள இரண்டு போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும்.
இந்திய அணியை 150 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்துவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை.
இந்தப் பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் அனைவரின் ஆதரவும் இல்லையென்றால் இது சாத்தியமில்லை என தெரிவித்தார்.