2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இந்திய கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக ஆடி இரட்டை சதம் விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
IND Win
Published on: 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. விராட் கோலி, சுப்மன் கில் சதம் விளாசினர்.

இந்த நிலையில் இரண்டாவது போட்டி கவுகாத்தியில் இன்று மதியம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான் கேம்ப்பெல், கார்ட்டி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கார்ட்டி 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷாய் ஹோப் களம் இறங்கினார்.

வெஸ்ட் இண்டீஸ் அபார பேட்டிங்:

ஜான் கேம்ப்பெல் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 2 சிக்ஸ், 7 பவுண்டரிகளுடன் அரைசதம் விளாசினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் குவித்தது. அரைசதத்தை தொடர்ந்து கேம்ப்பெல் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். அவர் 65 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் சதம் விளாசினார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 68 பந்தில் 101 ரன்கள் எடுத்த நிலையில் குர்னூர் பிரார் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் 18.1 ஓவரில் 147 ரன்கள் குவித்தது. 3-ஆவது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் அமிர் ஜாங்கூ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இருவரும் சதம் விளாசினர். ஷாய் ஹோப் 94 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 104 ரன்கள் விளாசினார். அமிர் ஜாங்கூ 77 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் 114 ரன்கள் விளாசினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது.

மூன்று பேர் சதம் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 5 ஓவர்களில் 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

இந்தியா அபார வெற்றி:

406 எனும் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 75 பந்துகளில் 101 (10 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார்.

விராட் கோலி அதிரடியாக ஆடி 19 பந்துகளில் 29 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக ஆடி 37 பந்துகளில் 31 ரன்களை விளாசினார். இந்திய அணி 43.3 ஓவர்களிலேயே 2 விக்கெட் மட்டும் இழந்து 406 ரன்களை எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் சுப்மன் கில் 133 பந்துகளில் 223 ரன்கள் (26 பவுண்டரிகள், 8 சிக்சர்கள்) விளாசினார்.

இதன் மூலம் இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com