

இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற வதற்கான தொழில்நுட்ப யுத்தியை கொண்டிருக்கவில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் ஆகியவற்றில் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தவர் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி.
சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த இளம் திறமையாக வைபவ் சூர்யவன்ஷி பார்க்கப்படுகிறார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான தேசிய அணியில் இடம் பெறாத சூர்யவன்ஷி, தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது ஆட்டத்தை மேம்படுத்தி வருகிறார். தற்போது இந்திய டி20 அணியில் இடம்பிடித்து அதிரடியாக ஆடி வருகிறார்.
சூர்யவன்ஷியால் டெஸ்ட் போட்டிகளில் இதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையே, சூர்யவன்ஷி டெஸ்ட் போட்டிகளில் விளையாட தனக்கு இருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பங்கேற்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் மான்டி பனேசர் கூறியதாவது:
சூர்யவன்ஷி டெஸ்ட் கிரிக்கெட்டிற்குள் நுழைவதை என்னால் பார்க்க முடியவில்லை. தற்போது டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய இரு வகைகளிலும் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே வீரர் ஹாரி புரூக் மட்டுமே. ஆனால், டெஸ்ட் போட்டிக்குத் தேவையான பேட்டிங் தொழில்நுட்பம் சூர்யவன்ஷியிடம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட மைக்கேல் கிளார்க், விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் போல அனைத்து வகை பார்மட்டிலும் சிறப்பாக விளையாட முடியும். சூர்யவன்ஷியிடம் அதற்கான டேலண்ட் இருக்கிறது. ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறாரா என்பதுதான் கேள்வி என குறிப்பிட்டார்.