

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
அயர்லாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் லெஸ்டர் நகரில் உள்ள மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்தது. கேப்டன் கேபி லூயிஸ் 69 ரன்னும், எமி ஹண்டர் 62 ரன்னும், ரெபெக்கா ஸ்டோக்கெல் 54 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 282 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடியது.
இறுதியில் இங்கிலாந்து அணி 38.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 283 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அந்த அணியின் மையா பவுச்சியர் சதமடித்து அசத்தியதுடன் 104 ரன்னும், சோபியா டங்க்லி அரை சதம் கடந்து 73 ரன்னும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றதுடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்த அதிகபட்ச இலக்கு என்ற புதிய சாதனையை படைத்தது.
இதற்கு முன் கடந்த 2023-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்டோலில் 267 ரன்களை சேஸ் செய்ததே இங்கிலாந்தின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது அதை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.