

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 130 ரன்கள் தேவைப்படுகிறது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்களுக்கு சுருண்டது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். சவுத் ஷகீல் 43 ரன் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங் 4 விக்கெட்டும், ஆலி ராபின்சன், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 453 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹாரி புரூக் 70 ரன்னிலும், ஜேமி ஸ்மித் 69 ரன்னிலும், டான் லாரன்ஸ் 65 ரன்னிலும், எமிலோ கே 60 ரன்னிலும், ஆலி ராபின்சன் 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியை விட 320 ரன்கள் முன்னிலை பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் ரசாவுல்லா 4 விக்கெட்டும், முகமது அலி, இம்ரான் ரந்தவா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. அசன் அவைஸ் (29 ரன்), முன்னாள் கேப்டன் ஷான் மசூத் (21 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை திறம்பட சமாளித்து சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். அசன் அவைஸ் 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு ஷான் மசூத்துடன், கேப்டன் பாபர் அசாம் இணைந்து வலுவூட்டினார். ஷான் மசூத் 95 ரன்னிலும், பாபர் அசாம் 76 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.
ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுக்கு 318 ரன்னுடன் பாகிஸ்தான் தள்ளாடியது.
புதுமுக வீரர் ரசாவுல்லாவும், முகமது அப்பாசும் இணைந்து அதிரடியாக ஆடினர். அதுவும் சிக்சர் மழை பொழிந்து மிரள வைத்தனர்.
9-வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 121 ரன்கள் சேர்த்த நிலையில் அப்பாஸ் 42 ரன்னில் அவுட்டானார்.
ரசாவுல்லா 63 பந்தில் 9 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 81 ரன் குவித்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 449 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இன்று களமிறங்குகிறது.