பிலிப் சால்ட் அதிரடி சதம்: முதல் டி 20 போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இங்கிலாந்து

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 182 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 183 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
பிலிப் சால்ட் அதிரடி சதம்: முதல் டி 20 போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இங்கிலாந்து
Published on

பார்படாஸ்:

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என கைப்பற்றியது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று பார்படாசில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்களைக் குவித்தது.

நிகோலஸ் பூரன் 38 ரன்னும், ஷெபர்ட் 35 ரன்னும், குடகேஷ் மோடே விளாசி 33 ரன்னும், ரசல் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமுது 4 விக்கெட்டும் அடில் ரஷீத் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 183 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

வில் ஜாக்ஸ் 17 ரன்னில் அவுட்டானார். ஜாஸ் பட்லர் டக் அவுட்டானார்.

பிலிப் சால்டுடன் இணைந்தார் ஜேக்கப் பெதெல். இந்த ஜோடி இறுதிவரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

ஜேக்கப் பெதெல் அரை சதம் கடந்தார். பிலிப் சால்ட் சதமடித்து அசத்தினார்.

இறுதியில், இங்கிலாந்து 16.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பிலிப் சால்ட் 103 ரன்னும், பெதெல் 58 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com