துலீப் டிராபி: நான்காம் நாள் முடிவில் கிழக்கு மண்டலம் 212/5 - வலுவான முன்னிலை

தெற்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ishan kishan
Published on
Summary

துலீப் டிராபி இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 212 ரன்கள் எடுத்து வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கியது. இதில் கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இஷான் கிஷான் இரட்டை சதம்

அதன்படி, முதலில் பேட் செய்த கிழக்கு மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி இரட்டை சதம் கடந்து, 270 ரன்கள் குவித்தார். குமார் குஷாக்ரா சதமடித்து 101 ரன்னில் வெளியேறினார்.

தெற்கு மண்டல அணி சார்பில் திரிபுரன விஜய் 4 விக்கெட்டும், சமா மிலிந்த், ஷ்ரேயாஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் அரை சதம் கடந்து 62 ரன்னில் அவுட்டானார்.

கேப்டன் திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். மூன்றாம் நாள் முடிவில் தெற்கு மண்டல அணி 6 விக்கெட்டுக்கு 242 ரன் எடுத்திருந்தது. திலக் வர்மா 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

திலக் வர்மா 99 ரன்னில் அவுட்

நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. திலக் வர்மா பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், தெற்கு மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிழக்கு மண்டல அணியை விட 372 ரன்கள் பின் தங்கியுள்ளது தெற்கு மண்டல அணி.

கிழக்கு மண்டல அணி சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டும், ஷமி, குரேஷி, ஷிகர் மோகன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில், கிழக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் அபிமன்யு ஈஸ்வரன் 3 ரன்னிலும், வைபவ் சூர்யவன்ஷி 8 ரன்னிலும் அவுட்டாகினர். 13 ரன்னில் 2 விக்கெட் இழந்து கிழக்கு மண்டல அணி தத்தளித்தது.

இஷான் கிஷன், ஷிகர் மோகன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ஷிகர் மோகன் அரை சதம் கடந்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 126 ரன்கள் சேர்த்தது.

இஷான் கிஷன் சிறப்பான ஆட்டம்

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஷான் கிஷன் 80 ரன்னில் அவுட்டானார்.

6வது விக்கெட்டுக்கு குமார் குஷாக்ரா-குரேஷி ஜோடி 52 ரன்கள் சேர்த்தது.

இறுதியில், நான்காம் நாள் முடிவில் கிழக்கு மண்டல அணி 5 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் தெற்கு மண்டல அணியை விட 584 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மீதம் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் கிழக்கு மண்டல அணியே துலீப் டிராபியை வெல்ல வாய்ப்புள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com