டிஎன்பிஎல் 2026: நாளை சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் அணிகள் மோதல்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளன.
chepauk super gillies
Published on

10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

மதுரை முன்னிலை

இதுவரை நடைபெற்ற 12 ஆட்டங்களின் முடிவில் மதுரை பாந்தர்ஸ் 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது.

திருச்சி சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் தலா 2 வெற்றியுடன் 4 புள்ளிகளும், கோவை கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் தலா 2 புள்ளிகளும் பெற்றுள்ளன. சேலம் ஸ்பார்டன்ஸ் 3 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

நாளையும் 2 ஆட்டம் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அபிஷேக் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் போட்டியில் நெல்லையிடம் 50 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் திருப்பூரிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. 3-வது போட்டியில் திண்டுக்கல்லை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நாளை சேலம் அணியை தோற்கடித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2-வது வெற்றியைப் பெறும் ஆர்வத்தில் உள்ளது.

ஜெகதீசன்

கடந்த ஆட்டத்தில் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. அபிஷேக் தன்வர், அஷ்வந்த் வல்தபா ஆகியோர் நேர்த்தியாக பந்து வீசினார்கள். விக்னேஷ், சிலம்பரசன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ஜெகதீசன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆசிக், தினேஷ் ராஜ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள். இதே உத்வேகத்துடன் நாளைய போட்டியிலும் விளையாடும் வேட்கையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இருக்கிறது.

சேலம் ஸ்பார்டன்ஸ் தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோல்வியைத் தழுவியது. கோவையிடம் 34 ரன் வித்தியாசத்திலும், திருச்சியிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும், மதுரையிடம் 36 ரன் வித்தியாசத்திலும் தோற்றது. முதல் வெற்றிக்காகக் காத்திருக்கிறது.

திண்டுக்கல்-மதுரை

இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com