ஒற்றை கையால் அசால்டாக பிடித்த கேட்ச்: வைரலாகும் கிளென் பிலிப்ஸ் போஸ்

மழை பெய்ததால் போட்டி 16 ஓவராகக் குறைக்கப்பட்டது.
glenn phillips
Published on
Summary

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் ஒற்றை கையில் பிடித்த அசத்தலான கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 22வது லீக் போட்டியில் டிரினிடாட் அண்ட் டொபாகோ நைட்ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின.

மழை பெய்ததால் இந்தப் போட்டி 16 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற டிரிபாகோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சதமடித்த ஹெட்மயர்

அதன்படி, முதலில் பேட் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்தது. ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடியாக ஆடி 40 பந்தில் சதம் விளாசி அசத்தினார். அவர் 43 பந்தில் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நடப்பு தொடரில் இது அவரது 2-வது சதமாகும். ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடியாக ஆடி 27 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி டிரினிடாட் அணிக்கு 16 ஓவரில் 182 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அப்போது கடினமான இலக்கை நோக்கி விளையாடிய டிரினிடாட் அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன், டுவைன் பிரிட்டோரியஸ் வீசிய பந்தை லெக் சைடில் தூக்கி அடித்தார்.

பிலிப்ஸ் அசத்தல் கேட்ச்

அப்போது பவுண்டரி எல்லையில் நின்றிருந்த கிளென் பிலிப்ஸ் வேகமாக ஓடிவந்து, பாய்ந்து ஒற்றை கையால் கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த கேட்ச்சை நம்பமுடியாமல் அவர் சிரித்தபடி நின்றார். இதனால் சுனில் நரைன் 1 ரன்னில் வெளியேறினார்.

கயானா அணி வெற்றி

தொடர்ந்து ஆடிய டிரினிடாட் அணி 16 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அலெக்ஸ் ஹேல்ஸ் 24 பந்தில் 55 ரன்னும், நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 16 பந்தில் 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கயானா அணி சார்பில் முகமது நபி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சமீப காலமாக கிளென் பிலிப்ஸ் சூப்பர்மேனாக பாய்ந்து பந்தை தடுப்பது, கேட்ச் பிடிப்பது என தொடர்ந்து அசாத்தியமாக பீல்டிங் செய்துவருகிறார். கிளென் பிலிப்சின் அபார கேட்ச் கயானா அணியின் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com