டிஎன்பிஎல்: ஜெகதீசன், ஸ்வப்னில் சிங் அதிரடியில் சேலத்தை வீழ்த்தி 2வது வெற்றி பெற்றது சேப்பாக்

முதலில் ஆடிய சேலம் அணி 182 ரன்கள் குவித்தது.
jegadeesan
Published on

10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

இன்று நடைபெற்ற 14வது லீக் ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அபிஷேக் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

கடைசி ஓவரில் 4 சிக்சர்

அதன்படி, முதலில் களமிறங்கிய சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்தது. கடைசி ஓவரில் 4 சிக்சர்களை விளாசிய ஹரிஷ்குமார் 57 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஈஸ்வர் 39 ரன்னும், பூபதி குமார் 30 ரன்னும் எடுத்தனர்.

7வது விக்கெட்டுக்கு இணைந்த ஹரிஷ்குமார்-ஈஸ்வர் ஜோடி 68 ரன்கள் சேர்த்தது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் சிலம்பரசன், பிரேம்குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஜெகதீசன் 2வது அரை சதம்

இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஜெகதீசன் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். நடப்பு தொடரில் 2வது அரை சதத்தை பதிவு செய்தார்.

ஜெகதீசன் 39 பந்தில் 6 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 78 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் ஸ்வப்னில் சிங் சிக்சர்களை விளாசினார். அவர் 26 பந்தில் 5 சிக்சர் உள்பட 46 ரன்கள் குவித்து அவுட்டானார்.

இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com