

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான கேமரூன் கிரீன் விலகினார்.
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என கைப்பற்றியது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அக்டோபர் 9-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் விலகியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது கேமரூன் கிரீனுக்கு காயம் ஏற்பட்டது. அடிவயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் முதல் டெஸ்ட்டிலிருந்து விலகுவதை தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு உறுதிப்படுத்தினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேமரூன் கிரீன் விளையாட மாட்டார். அவர் காயத்திலிருந்து நன்றாக குணமடைந்து வருகிறார். இந்தத் தொடரின் பிற்பகுதியில் அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவார் என நம்புகிறோம் என தெரிவித்தார்.