

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் கரண் லாலின் அதிரடியால் மிசோரமை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது பெங்கால் அணி.
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
மும்பையில் நடந்த போட்டியில் மிசோரம், பெங்கால் அணிகள் மோதின. டாஸ் வென்ற மிசோரம் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கரண் லால் 41 பந்தில் 67 ரன் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் போரல் 30 பந்தில் 52 ரன் எடுத்தார்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மிசோரம் அணி 18.2 ஓவரில் 103 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சின்மய் சுதார் 43 பந்தில் 61 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இதன்மூலம் பெங்கால் அணி 93 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது பெங்கால் அணியின் 3வது வெற்றி ஆகும். ஆட்ட நாயகன் விருது கரண் லாலுக்கு வழங்கப்பட்டது.