

துலீப் டிராபி இறுதிப் போட்டியில் இஷான் கிஷன் மற்றும் குஷக்ராவின் அபார ஆட்டத்தால் கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்தது.
சென்னையில் நடைபெற்று வரும் துலீப் டிராபி இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம்- தெற்கு மண்டலம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நேற்று தொடங்கிய இந்த போட்டியில் கிழக்கு மண்டலம் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய கிழக்கு மண்டல அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். தொடக்க வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் 72 ரன்களும், மற்றொரு வீரர் வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்களும் சேர்த்தனர்.
ஷிகர் மோகன் சிறப்பாக விளையாடி 120 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்தார். கேப்டன் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். அவர் 122 பந்துகளில் சதம் விளாசினார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் கிழக்கு மண்டலம் 4 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்திருந்தது. இஷான் கிஷன் 111 ரன்களுடனும், குஷக்ரா 63 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இஷான் கிஷன் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். மறுமுனையில் குமார் குஷக்ரா 128 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷன் 204 பந்துகளில் 150 ரன்களையும், 270 பந்துகளில் 200 ரன்களையும் கடந்்்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 300 பந்துகளில் 250 ரன்கள் குவித்தார். அவர் 301 பந்துகளில் 250 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். பின்னர் மீண்டும் களம் இறங்கினார். முச்சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 270 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இவரது ஸ்கோரில் 30 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் அடங்கும்.
துலீப் டிராபி இறுதிப் போட்டியில் இஷான் கிஷன் அடித்த 270 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர் என்றால், அது அல்ல. இதற்கு முன்னதாக ஜெய்ஸ்வால் 266 ரன்கள் அடித்துள்ளார். அதை தற்போது இஷான் கிஷன் முறியடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக முச்சதம் அடித்த ஒரு வீரர் உள்ளார். அவர்தான் ராமன் லம்பா. 1987-ம் ஆண்டு நடைபெற்ற துலீப் டிராபி இறுதிப் போட்டியில் மேற்கு மண்டலம்- வடக்கு மண்டலம் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய மேற்கு மண்டலம் அன்ஷுமன் கெய்க்வாட்டின் இரட்டை (216) சதத்தால் 444 ரன்கள் குவித்தன. பின்னர் வடக்கு மண்டலம் களம் இறங்கிறது. ராமன் லம்பா 320 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரது ஆட்டத்தால் வடக்கு மண்டலம் 868 ரன்கள் குவித்தது. துலீப் டிராபி பைனில் ஒரு இன்னிங்சில் இன்னும் அதிகபட்ச ரன்னாக இது இருந்து வருகிறது. மேலும், ராமன் லம்பா அடித்ததுதான் ஒரு பேட்ஸ்மேனின் அதிகப்பட்ச ஸ்கோர் ஆகும்.
அந்த நேரத்தில் முச்சதம் அடித்த அவர் இந்திய அணியில் நீண்ட காலமாக நீடித்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு சிறப்பாக அமையவில்லை.
1986-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருநதார். ஆனால், ஒரு போட்டியில் கூட விளையாட வைக்கவில்லை. அதன்பின் ஜெய்ப்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகம் ஆனார், 53 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். 6 போட்டிகளில் கொண்ட தொடரில் 72 மற்றும் 102 ரன்கள் என முத்திரை பதித்தார். 278 ரன்கள் சேர்த்து தொடர் நாயகன் விருது வென்றார்.
இதனால நீண்ட காலம் இந்திய அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 102 ரன்கள் மட்டுமே அடித்தார். 32 ஒருநாள் போட்டிகளில் 783 ரன்கள் சேர்த்தார்.