டார்வின் டெஸ்டில் ஹசன் தமிம் சதம்: 2ம் நாள் முடிவில் வங்கதேசம் 351 ரன்கள் குவிப்பு

வங்கதேச அணியின் கேப்டன் ஷாண்டோ 84 ரன்னில் அவுட்டானார்.
hasan tamim
Published on: 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது நாள் முடிவில் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 351 ரன்களைக் குவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

டார்வின் டெஸ்ட்

ஆஸ்திரேலியா-வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டார்வினில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. வங்கதேச வீரர்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

ஸ்மித் அரை சதம்

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 71 ரன்னில் அவுட்டானார். ஜேக் வெதரால்டு 23 ரன்னும், டிராவிஸ் ஹெட் 22 ரன்னும் எடுத்தனர். 5-வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்மித்-கேரி ஜோடி 56 ரன்கள் சேர்த்தது.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 6 விக்கெட்டும், தஸ்கின் அகமது, எபாடட் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய வங்கதேசம் முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 2வது விக்கெட்டுக்கு இணைந்த ஹசன் தமிம்-மொமினுல் ஹக் ஜோடி102 ரன்களை சேர்த்த நிலையில் மொமினுல் ஹக் 49 ரன்னில் அவுட்டானார்.

ஹசன் தமிம் சதம்

சிறப்பாக ஆடிய ஹசன் தமிம் சதமடித்து அசத்தினார். அவர் 101 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய கேப்டன் ஷாண்டோ பொறுப்புடன் ஆடி அரை சதம்ம் கடந்து 84 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்துள்ளது. மெஹிதி ஹசன் 32 ரன்னும், ஹசன் மகமுது 13 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

வங்கதேசம் அணி ஆஸ்திரேலியாவை விட 153 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com