முதல் டெஸ்டில் சரிவிலிருந்து மீட்ட ஹிருதோய், லிட்டன் தாஸ்-முதல்நாள் முடிவில் வங்கதேசம் 327/6

6வது விக்கெட்டுக்கு தவ்ஹித் ஹிருதோய், லிட்டன் தாஸ் ஜோடி 206 ரன்கள் சேர்த்தது.
hridoy, litton das
Published on: 
Summary

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது.

வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.

டாஸ் வென்ற வங்கதேசம்

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்கில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, வங்கதேச அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மபிஜுல் இஸ்லாம் முதல் பந்தில் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய மொமினுல் ஹக்கும் டக் அவுட்டில் வெளியேறினார். தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஷாண்டோ 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.

திணறிய வங்கதேசம்

வங்கதேச அணி 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து திணறியது.

தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசன் தமிம் உடன் தவ்ஹித் ஹிருதோய் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. தன்ஜித் ஹசன் தமிம் அரை சதம் கடந்தார்.

4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 99 ரன்கள் சேர்த்த நிலையில் தன்ஜித் ஹசன் 67 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய முஷ்பிகுர் ரஹிம் டக் அவுட்டானார். அப்போது வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது.

சரிவிலிருந்து மீட்ட ஹிருதோய், லிட்டன்

அவரை தொடர்ந்து லிட்டன் தாஸ், தவ்ஹித் ஹிருதோய் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது.

சரிவை நோக்கிச் சென்ற அணியை இந்த ஜோடி திறம்பட போராடி மீட்டது.

சிறப்பாக ஆடிய தவ்ஹித் ஹிருதோய் சதமடித்து அசத்தினார். லிட்டன் தாஸ் அரை சதம் கடந்தார்.

6வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்த நிலையில் தவ்ஹித் ஹிருதோய் 137 ரன்னில் வெளியேறினார். அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முதல் நாள் முடிவில் வங்கதேசம் அணி 84 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. லிட்டன் தாஸ் 92 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

X