2-வது இன்னிங்சில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்- ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

அட்கின்சன் - கார்ஸ் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது.ஆஸ்திரேலியா தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டும் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
2-வது இன்னிங்சில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்- ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
Published on

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

அதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் அடித்தது. நாதன் லயன் 3 ரன்களுடனும், பிரெண்டன் டாகெட் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்திலேயே ஆஸ்திரேலிய அணி கடைசி விக்கெட்டை இழந்தது. நாதன் லயன் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனால் ஆஸ்திரேலிய அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட், கார்ஸ் 3 விக்கெட், ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினர் . தொடர்ந்து 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

முதல் இன்னிங்சை போலவே தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. கிராலி டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து 2-வது விக்கெட்டுக்கு டக்கெட் மற்றும் போப் ஜோடி சேர்ந்து விளையாடினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது.

டக்கெட் 28 ரன்னிலும் போப் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். அதன்படி ரூட் 8, ஹரி ப்ரூக் 0, ஸ்டோக்ஸ் 2, ஸ்மித் 15 என வெளியேறினர்.

இதனையடுத்து அட்கின்சன் - கார்ஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. கார்ஸ் 20 ரன்னிலும் அட்கின்சன் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டும் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com