முதல் டி20 போட்டி: இங்கிலாந்தை போராடி வென்றது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் நிகில் சவுத்ரி 38 பந்தில் 66 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
nikhil chaudhary
Published on: 
Summary

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மெல்போர்னில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

ஹாரி புரூக் அதிரடி

அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் முதல் பந்தில் டக் அவுட்டானார். ஹாரி புரூக்-டாம் பாண்டன் ஜோடி இணைந்து சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது.

3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 97 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரி புரூக் 65 ரன்னில் ஆட்டமிழந்தார். டாம் பாண்டன் 22 பந்தில் 39 ரன் குவித்தார்.

இங்கிலாந்து 187 ரன் குவிப்பு

இறுதியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா சார்பில் ஜேக் எட்வர்ட்ஸ், நிகில் சவுத்ரி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி 32 பந்தில் 37 ரன் எடுத்து அவுட்டானார்.

அடுத்து இறங்கிய சாம் ஹார்பர் 15 பந்தில் 32 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

நிகில் சவுத்ரி அரைசதம்

நிகில் சவுத்ரி சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 38 பந்தில் 66 ரன் எடுத்து வெளியேறினார்.

ஜேக் எட்வர்ட்ஸ் அதிரடி

கடைசி கட்டத்தில் ஜேக் எட்வர்ட்ஸ் அதிரடியாக ஆடி 11 பந்தில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 25 ரன் குவித்து வெற்றிக்கு வழி வகுத்தார்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து போராடி வென்றது. அத்துடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

X