

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 429 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 82.3 ஓவரில் 329 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
தொடக்க ஆட்டக்காரர்களான மார்கிரம், அக்கர்மேன் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
மார்க்ஸ் அக்கர்மேன் 95 ரன்களும், எய்டன் மார்க்ரம் 78 ரன்களும் எடுத்தனர். டேவிட் பெடிங்ஹாம் 50 ரன்களும், மார்கோ யான்சன் 52 ரன்களும் சேர்த்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும், ஜோஷ் ஹேசில்வுட், கூப்பர் கான்னொலி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர் மேட் ரென்ஷா அரை சதம் கடந்து 74 ரன்னில் அவுட்டானார். கேமரூன் கிரீன் அரை சதமடித்து 65 ரன்னில் வெளியேறினார்.
3வது விக்கெட்டுக்கு இணைந்த ரென்ஷா-கிரீன் ஜோடி 126 ரன்கள் சேர்த்தது
அடுத்து இறங்கிய ஜோஷ் இங்லீஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவருக்கு அலெக்ஸ் கேரி நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
5வது விக்கெட்டுக்கு ஜோஷ் இங்லிஸ்-அலெக்ஸ் கேரி ஜோடி 185 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 125.1 ஓவரில் 429 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் சைமன் ஹார்மர் 4 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
100 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 2வது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.