

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பிரபலமான கிரிக்கெட் வீரர் ஆவார். 1992-ம் ஆண்டு அவரது தலைமையில் பாகிஸ்தான் உலக கோப்பையை வென்றது.
73 வயதான இம்ரான் கான் 2023-ம் ஆண்டில் இருந்து ராவல்பிண்டியில் உள்ள சிறையில் இருந்து வருகிறார். உடல் நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு கோர்ட்டு உத்தரவின் பேரில் சமீபத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இம்ரான்கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரி கவாஸ்கர், கபில் தேவ் உள்ளிட்ட 21 முன்னாள் சர்வதேச கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தனர்.
இந்த நிலையில் இம்ரான் கான் உடல்நிலை குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஜாவித் மியான்டட், மொயின்கான் கவலை அடைந்துள்ளனர். முன்னாள் கேப்டனான மியான்டட் கூறியதாவது:-
இம்ரான் கானுக்கு நேர்ந்துள்ள நிலைமை விரைவில் சரியாகிவிட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஏனெனில் அவர் இதைச் சந்திக்க தகுதியானவர் அல்ல. அவரிடம் நடந்து கொள்ளும் விதம் சரியல்ல. இது தேவையற்றது. அவருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது.
அவர் சிறையில் என்ன செய்துகொண்டு இருப்பார், எதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருப்பார் என்று எப்போதும் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். நாங்கள் அவ்வளவு நெருக்கமாக இருந்தோம். எப்போதும் ஒன்றாகவே இருந்தோம். பாகிஸ்தானை உச்சத்துக்கு நாங்கள் கொண்டு சென்றோம். இதை எல்லாம் நினைக்கும்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது.
இவ்வாறு மியான்டட் கண்ணீர் மல்க கூறினார்.
முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பராக பணி யாற்றிவருமான மொய்ன் கான் கூறியதாவது:-
இம்ரான்கான் உடல் நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் குடிமகனுமான அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சையை வழங்குமாறு பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இம்ரானுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் நான் வலியுறுத்துகிறேன். அவருடன் இணைந்து விளையாடிய நாங்கள் அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டோம். பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு அவர் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இவ்வாறு மொய்ன்கான் கூறியுள்ளார்.
1992-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் மியான்டட், மொய்ன்கான் இடம் பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.