

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
கடந்த 5-ந்தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸில் 504 ரன்கள் குவித்து வலுவான அடித்தளத்தை அமைத்தது. அந்த அணியின் பிரெண்டன் டெய்லர் சிறப்பாக விளையாடி 131 ரன்கள் எடுத்தார்.
பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. ரஹ்மானுல்லா ஜத்ரன் 113 ரன்களும், செடிகுல்லா அடல் 105 ரன்களும் விளாசினர். இருவரும் இணைந்து 200 ரன்கள் சேர்த்தனர்.
நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 402 ரன்கள் குவித்திருந்தது. ரஹ்மத் ஷா 94 ரன்களுடனும், ஜியா-உர்-ரஹ்மான் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கேப்டன் ரஹ்மத் ஷா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து அவர் சிறப்பாக விளையாடி 173 ரன்கள் விளாசினார். இதனால் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 514 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஜிம்பாப்வே அணி தரப்பில் நியூமேன் நியாம்ஹுரி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 10 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்த டெஸ்ட் டிராவில் முடிவடைய வாய்ப்புள்ளது.