ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்

ரியான் பர்ல் மட்டும் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர்.
AFG Win tri Series
Published on: 

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது.

ஷார்ஜாவில் இன்று இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஜிம்பாப்வே சொதப்பல்:

அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. அந்த அணி தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டரில் கேப்டன் சிக்கந்தர் ராசா மற்றும் இவருடன் ஆடிய ரியான் பர்ல் மட்டும் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர்.

எனினும், ஜிம்பாப்வே அணி 43.3 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் சிக்கந்தர் ராசா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 68 ரன்களையும், ரியான் பர்ல் 31 ரன்களையும் எடுத்தார். ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், ஃபரூக்கி, பிலால் சமி, மொகமது நபி தலா 2 விக்கெட்டுகளைம் கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தான் வெற்றி:

இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. இந்த அணியின் தொடக்க வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் 31 பந்துகளில் 36 ரன்களை எடுத்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் ஆடிய இப்ராஹிம் சத்ரான் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார்.

இவர் 96 பந்துகளில் 70 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மிடில் ஆர்டரில் கேப்டன் ரஹ்மத் ஷா 63 பந்துகளில் 43 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி 34.3 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது.

இதனால், ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றியை பதிவு செய்தது. மேலும், மூன்று அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான். ஜிம்பாப்வே சார்பில் நியூமேன் நியாம்ஹூரி 2 விக்கெட்டுகளையும், வெஸ்லி மதிவீர் 1 விக்கெட் கைப்பற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com