

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் டெஸ்டில் ஆப்பானிஸ்தானுக்கு 479 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வங்கதேசம்.
ஆப்கானிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. சத்மான் இஸ்லாம் (67), தன்ஸித் ஹசன் (83), லிட்டன் தாஸ் (53) ஆகியோரின் அரைசதங்களால் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 346 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் முகமது சலீம் 4 விக்கெட்டும், யாமின் அகமத்சாய் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. ரஹ்மத் ஷா ஆட்டமிழக்காமல் 105 ரன்களும், அப்துல் மாலிக் 62 ரன்களும் அடிக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 240 ரன்களில் ஆல்அவுட் ஆனது. வங்கதேசம் அணி சார்பில் ஹசன் மெக்மூத் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். எபாடத் ஹொசைன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 126 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஷாண்டோ 82 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 81 ரன்களும் சுர்த்தனர்.
இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் லிட்டன் தாஸ் 102 ரன்களும், மெஹிதி ஹசன் மிராஸ் 52 ரன்களும் அடிக்க, வங்கதேசம் 372 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து வங்கதேசம் 478 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இதனால் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 479 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 479 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 12 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.