4-வது டி20 போட்டி: 24 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

இந்திய அணி சார்பில் நிதிஷ் குமார் ரெட்டி 20 பந்துகளில் 41 ரன்களை எடுத்தார்.
WI Win
Published on: 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான நான்காவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

லக்னோவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடந்த 2வது போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தூரில் நடைபெற்ற 3-ஆவது போட்டியில் இந்திய அணி 14 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அபார பேட்டிங்:

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான 4-ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. ஐதராபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 3 விக்கெட் இழப்புக்கு 247 ரன்களை குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ஷாய் ஹோப் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 102 ரன்களை (4 பவுண்டரிகள், 9 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் களமிறங்கிய ஆண்ட்ரூ 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பிறகு களமிறங்கிய ஷிம்ரன் ஹெட்மயர் 12 பந்துகளில் 33 ரன்களை விளாசினார். ரோவ்மேன் பொவெல் 17 பந்துகளில் 24 ரன்களையும், ஷெர்ஃபேன் ரூத்தர்ஃபோர்டு 26 பந்துகளில் 49 ரன்களை குவித்தார்.

இந்திய அணி தடுமாற்றம்:

248 எனும் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 56 ரன்களை விளாசினார். இவருடன் களமிறங்கிய அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 29 ரன்களை எடுத்தார். பிறகு களமிறங்கிய இஷான் கிஷன் 6 ரன்களில் நடையை கட்டினார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 16 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 25 பந்துகளில் 43 ரன்களை எடுத்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். நமன் தீர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்தடுத்து வந்தவர்களில் நிதிஷ் குமார் ரெட்டி மட்டும் 20 பந்துகளில் 41 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன்களை எடுத்தது.

கடைசி 3 பந்துகளில் 25 ரன்களை எடுக்க வேண்டிய சூழலில் அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன. இதனால், கடைசி டி20 போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் சூழல் உருவாகி இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com