

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். சவுத் ஷகீல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் வெறும் 133 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜோஷ் டங் 4 விக்கெட்டுகளையும், ஆலி ராபின்சன் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எமிலோ கே பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த எமிலோ கே - ஹாரி புரூக் ஜோடி 104 ரன்கள் சேர்த்த நிலையில் எமிலோ கே 60 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு156 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். ஹாரி புரூக் 70 ரன்னில் அவுட்டானார். டான் லாரன்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஜேமி ஸ்மித் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 69 ரன்னில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ஆலி ராபின்சனும் தன் பங்குக்கு அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 453 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் பாகிஸ்தான் அணியை விட இங்கிலாந்து அணி 320 ரன்கள் முன்னிலை பெற்றது. பாகிஸ்தான் சார்பில் ரசவுல்லா 4 விக்கெட்டுகளையும், முகமது அலி மற்றும் இம்ரான் ரந்தவா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
320 ரன்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சயிம் ஆயுப் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய அப்துல்லா ஷஃபிக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய ஆசான் அவைஸ் நிதானமாக ஆடி 29 ரன்களை எடுத்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஷான் மசூத் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். இவர் 21 ரன்களை எடுத்த போது, இரண்டாம் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால், இரண்டாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களை எடுத்து 268 ரன்கள் பின்தங்கியுள்ளது.