முதலாவது டி20 போட்டி: ஜிம்பாப்வே அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 37 பந்துகளில் 49 ரன்களை எடுத்தார்.
Deepti Sharma
Published on: 

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே மகளிர் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ராய்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது.

ஜிம்பாப்வே சொதப்பல்:

இதையடுத்து பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணிக்கு கெலிஸ் மற்றும் பெலொவ்டு பிசா தொடக்கம் கொடுத்தனர். பெலொவ்டு பிசா ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பிறகு களமிறங்கிய மொடெஸ்டர் 26 பந்துகளில் 16 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷேர்ன் மார்ஸ் 33 பந்துகளில் 43 ரன்களை எடுத்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கெலிஸ் 44 பந்துகளில் 42 ரன்களை விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்களை எடுத்தது.

இந்திய அணி சார்பில் நந்தனி ஷர்மா 2 விக்கெட்டுகளையும், கிரான்டி கௌத், அருந்ததி ரெட்டி மற்றும் ஸ்ரீ சராணி தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

இந்திய அணி அபாரம்:

115 எனும் எளிய இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 9 ரன்களிலும், ஷஃபாளி வெர்மா 4 ரன்களிலும், அனுஷ்கா சர்மா 4 ரன்களும், ஹர்மன்பிரீத் கௌர் 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், நிகி பிரசாத் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். இவருடன் தீப்தி சர்மா 37 பந்துகளில் 49 ரன்களை எடுத்தார்.

15.4 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களை எடுத்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com