

3-வது சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி (டபிள்யு டி.ஏ. 250) நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. நேற்று 2-வது நாள் போட்டிகள் முன்னதாகவே காலையிலே தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது.
தமிழக வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி முதல் சுற்றில் இந்தப் போட்டியில் 8-வது வரிசையில் உள்ள போலந்து நாட்டைச் சேர்ந்த கதர்சினா கவாவை எதிர்கொண்டார்.
இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் கோவையை சேர்ந்த 17 வயதான ரேவதி 6-4, 2-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு கதர்சினாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார்.
மாயா ராஜேஸ்வரன் ரேவதி வைல்டு கார்டு மூலம் விளையாட தகுதி பெற்று இருந்தார். அவர் உலக தரவரிசையில் 665-வது இடத்தில் உள்ளார். கதர்சினா தரவரிசையில் 115-வது இடத்தில் இருக்கிறார்.
இதேபோல இந்தியாவின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான வைஷ்ணவி அட்கர் தொடக்க சுற்றில் இங்கிலாந்தை சேர்ந்த ஜோடி பர்ரேஜஜை 3-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த போட்டியில் பங்கேற்ற 3-வது இந்திய வீராங்கனையான சகஜா யமலாபள்ளி முதல் ரவுண்டிலேயே தோற்று வெளியேறினார். ஐதராபாத்தை சேர்ந்த அவர் 4-6, 6-3, 3-6 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்து வீராங்கனையும், தரவரிசையில் 90-வது இடத்தில் இருப்பவருமான சிமோனா வால்டர்ட்டிடம் வீழ்ந்தார்.
மற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியனும், இந்த போட்டியின் முதல் நிலை வீராங்கனையுமான ஜானிஸ் ஜென் (இந்தோ னேசியா), 3-வது வரிசையில் உள்ள மாக்டா லினெட் (போலந்து), 6-வது மற்றும் 7-ம் நிலையில் இருக்கும் போலினா குடெர்மெடோவா, அனஸ்டசியா ஜகரோவா (உஸ்பெகிஸ்தான்) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
4-வது வரிசையில் உள்ள பன்னா உட்வர்டி (அங்கேரி), இந்தப் போட்டி யில் 5-ம் நிலையில் இருக் கும் மனஞ்சாயா சவாங்காவ் (தாய்லாந்து) போன்ற முன்னணி வீராங்கனைகள் முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவி வெளியேறினார்கள்.