

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் பிரிவில் பெண்கள் அணியைத் தொடர்ந்து இந்தியாவின் ஆண்கள் அணியும் இன்று வெண்கலப் பதக்கம் வென்றது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையால் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
இந்தியா இதுவரை 10 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
அபய் சிங், வீர் சோத் ராணி, வேலவன் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் ஸ்குவாஷ் அணி சீனா (3-0) , தென் கொரியா (3-0) ஆகியவற்றையும், காலிறுதியில் குவைத்தையும் (2-0) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இன்று பிற்பகல் நடந்த அரையிறுதியில் இந்திய அணி மலேசியாவை சந்தித்தது.
முதல் போட்டியில் அபய் சிங் 0-3 என்ற கணக்கில் போராடி வீழ்ந்தார். 2-வது ஆட்டத்தில் வீர் சோட்ராணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
3-வது போட்டியில் வேலவன் செந்தில்குமார் 1-3 என்ற கணக்கில் தோற்றார். இதனால் அபய் சிங், வீர் சோட்ராணி, வேலவன் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அணிக்கு வெண்கலம் கிடைத்தது.
இது ஸ்குவாஷில் கிடைத்த 5-வது பதக்கமாகும்.
முன்னதாக, இன்று காலை நடந்த அரையிறுதியில் இந்திய மகளிர் அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா இதுவரை 10 தங்கம், 23 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களைப் பெற்றுள்ளது.