பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்க வேண்டும்- ஐசிசியிடம் தேர்வுக்குழு முன்னாள் தலைவர் வலியுறுத்தல்

தயவுசெய்து பந்து வீச்சாளர்கள் மீதும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
Chetan Sharma
Published on: 

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரில் பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ரன் மழை

பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களில் ரன் மழை பொழியப்படுகிறது. 2-வது போட்டியில் இந்தியா 249 ரன் குவித்தது. இதை வெஸ்ட் இண்டீஸ் சேஸ் செய்தது. 3- வது ஆட்டத்தில் இந்தியா 223 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 209 ரன்னும் எடுத்தன.

4-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 247 ரன் குவித்தது. அதற்கு இந்திய அணி 223 ரன் எடுத்தது. அந்த அளவுக்கு ரன்களை இரு அணிகளும் குவித்து வருகின்றன.

பவுலர்களுக்கு சாதகமான ஆடுகளம்

இந்தநிலையில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தேர்வுக் குழு முன்னாள் தலைவரும், முன்னாள் வேகப்பந்து வீரருமான சேத்தன் சர்மா வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ரசிகர்கள் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பார்க்க விரும்புகிறார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் தயவுசெய்து பந்து வீச்சாளர்கள் மீதும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

பவுலர்கள் அடி வாங்குவதற்காகவே மைதானத்துக்கு வருகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவர்கள் மீண்டும் களத்திற்கு வர விரும்பாத அளவிற்கு அவர்களை அடித்து நொறுக்காதீர்கள்.

ஆரோக்கியமான போட்டி

பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள் அவசியம். ஆரோக்கியமான போட்டி மிகவும் முக்கியமானது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்நாட்டு போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கு எப்படி சாதகமான பிட்ச்களை வழங்குகிறதோ அதேபோல சர்வதேச போட்டிகளிலும் அத்தகைய ஆடுகளங்களை அமைக்க வேண்டும்.

அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீச்சாளர்கள் போட்டியிடும் வகையில் சமநிலையான ஆடுகளங்களை உருவாக்க வேண்டும்.

20 ஓவர் போட்டியின் முக்கியத்துவம்

அடிப்படை மட்டத்தில் 20 ஓவர் கிரிக்கெட்டின் புகழ் அதிகரித்து வருகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். கால மாற்றத்திற்கு ஏற்ப இந்த வடிவம் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

ஆனாலும், இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு சிவப்பு பந்து கிரிக்கெட் இன்னும் மிக முக்கியமானது.

நான் பழைய காலத்து சிந்தனை கொண்டவன். அனைவருக்கும் சிவப்பு பந்து போட்டி மிகவும் முக்கியம் என்று நான் நம்புகிறேன். தற்போது இது போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பொறுத்தது. சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பல பயிற்சியாளர்களை நான் பார்த்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com