

5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் நடைபெற்று வருகிறது.
3-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 14 தங்கம், 22 வெள்ளி, 26 வெண்கலம் ஆக மொத்தம் 62 பதக்கம் பெற்று இருந்தது. நேற்று ஒரே நாளில் 27 பதக்கம் கிடைத்தது.
நிஷாத் குமார் இரட்டை தங்கம் (நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ( டி 47) வென்றார். மோனா அகர்வால் (துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1), சவுமியா குமார் (1500 மீட்டர் ஓட்டம் டி 12-13), ரிங்கு ஹூடா, (ஈட்டி எறிதல் எப் 46), தீப்தி ஜூவன்ஜி (400 மீட்டர் ஓட்டம் டி 20), பிரனவ் சூர்மா, தேவேந்தர் குமார் (வட்டு எறிதல் எப் 51-53 மற்றும் எப் 43/44/62/64/), சிம்ரன் சர்மா (200 மீட்டர் ஓட்டம் டி 12), ஆயுஷ் வர்மா (குண்டு எறிதல் என்.எப்.53), பிரவீன் குமார் (உயரம் தாண்டுதல் டி64) சச்சின் கிலாரி (குண்டு எறிதல் எப் 46), சிம்ரன் சர்மா, திலீப் கவித் (100 மீட்டர் ஓட்டம் டி 12) ஆகி யோரும் தங்கம் வென்றனர்.
4-வது நாளான இன்று காலை இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் கிடைத்தது. அதோடு ஒரு வெள்ளியும், 7 வெண்கலமும் பெற்றது.
பெண்களுக்கான வட்டு எறிதல் எப்54 பிரிவில் இந்திய வீராங்கனை சுவர்ணா ராஜ் 15.66 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
44 வயதான அவர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் ஆவார் சுவர்ணா தனது 6-வது முயற்சியில் இந்த இலக்கை தொட்டு முதல் இடத்தை பிடித்தார். தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 14-வது தங்கம் இதுவாகும்.
வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்தது. காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவில் ஷீத்தல் தேவி- தோமன் குமார் ஜோடி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
இந்திய ஜோடி 151-148 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேசிய ஜோடியை இறுதிப் போட்டியில் வீழ்த்தியது.
ஷீத்தல் தேவி பெற்ற 2-வது பதக்கம் இதுவாகும். அவர் ஏற்கனவே பெண்கள் இரட்டையர் காம்பவுண்டு பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்று இருந்தார்.
மேலும், வில்வித்தையில் சுவாதி சவுத்ரி வெள்ளிப் பதக்கம் பெற்றார். பெண்கள் தனிநபர் டபிள்யு 1 பிரிவில் பங்கேற்ற அவர் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனையிடம் தோற்றார். இந்த பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
பேட்மிண்டன் போட்டியில் 5 வெண்கல பதக்கம் கிடைத்தது. தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸ், பிரமோத் பகத்துடன் (பீகார்) இணைந்து எஸ்.எல்.3-எஸ்.யு5 பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றார்.
மேலும், கலப்பு இரட்டையர் எஸ்.எச்.6 பிரிவில் கிருஷ்ணா- நித்யாஸ்ரீ சிவன் ஜோடி வெண்கலம் வென்றது. நித்யாஸ்ரீ சிவன் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுகாஷ் யாதுராஜ் (எஸ்.எல்.4), அபிஜித் சகுவா (எஸ்.எல்.4), பெண்கள் ஒற்றையர் பிரிவில் சஞ்சனா குமாரி (எஸ்.எல்.3) ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் நிதீஷ் குமாருடன் (ராஜஸ்தான்) இணைந்து எஸ்.எல்.3- எஸ்.யு.5 பிரிவில் அரைஇறுதியில் சீன ஜோடியை 21-9, 14-21, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் வெள்ளிப்பதக்கம் உறுதி செய்யப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி இந்தியா 16 தங்கம், 23 வெள்ளி, 33 வெண்கலம் ஆக மொத்தம் 72 பதக்கம் பெற்று பதக்க பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது.