

ஆசிய பாரா போட்டிகள்: வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷீத்தல் தேவி மற்றும் தோமன் குமார் இணை தங்கப் பதக்கம் வென்றனர்.
2026 ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் கடந்த 18 ஆம் தேதி முதல் ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் நடந்து வருகிறது. வரும் 24 ஆம் தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
நடப்பு தொடரில் சீனா 227 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. உஸ்பெகிஸ்தான் 30 தங்கப் பதக்கங்கள் உட்பட 90 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. போட்டியை நடத்தும் ஜப்பான் மூன்றாம் இடத்தில் உள்ளது.
இந்த சூழலில் இன்று நடைபெற்ற வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷீத்தல் தேவி மற்றும் தோமன் குமார் இணை தங்கப் பதக்கம் வென்றனர்.
இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி, இந்தோனேசியாவை 151-148 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தது.
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், வில்வித்தைப் போட்டியிலும் இந்தியா பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
இது இந்தியாவின் 16வது தங்கப் பதக்கமும், ஒட்டுமொத்தமாக 71வது பதக்கமும் ஆகும். பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது நான்காவது இடத்தில் உள்ளது.
முன்னதாக இன்று நடைபெற்ற பெண்களுக்கான F54 வட்டு எறிதல் (Discus Throw) பிரிவில் 15.66 மீட்டர் தூரம் எறிந்து, சுவர்ணா ராஜ், இந்தியாவுக்கு 15வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.