

ஜப்பானில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சுஜீத் கல்கல் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இரண்டாவது சுற்றில் 2-9 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த சுஜீத், இறுதிப் போட்டியில் தஜிகிஸ்தானின் அப்துல்மஜித் குடியேவை 10-9 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
இப்போட்டியில் மல்யுத்தப் பிரிவில் இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். போட்டி முடிய ஒரு நிமிடம் 15 விநாடிகள் மட்டுமே இருந்தநிலையில் சுஜீத் 6-9 என்ற கணக்கில் பின்தங்கியிருந்ததால், தங்கப்பதக்கத்தை பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் இறுதியில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி தங்கப் பதக்கத்தை இந்தியாவிற்கு பெற்றுத்தந்துள்ளார்.
இதற்கு முன் 2014 மற்றும் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதே 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் தங்கம் வென்றிருந்தனர். தற்போது அந்தப் பெருமையை சுஜித் கல்கல் தக்க வைத்துள்ளார்.